தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று ராமநாதபுரம் வந்தார். ராமநாதபுரம் அரண்மனையில் சமீபத்தில் மறைந்த இளைய மன்னர் ராஜா குமரன் சேதுபதியின் அரண்மனைக்குச் சென்று, இளைய மன்னரின் மனைவி ராணி லெட்சுமி நாச்சியார், மகன் நாகேந்திர சேதுபதி ஆகியோரிடம் துக்கம் விசாரித்தார்.
பின்னர், அண்ணாமலை கூறியதாவது: சுகாதாரத்துறையில் நடந்த முறைகேடு குறித்து அமைச்சர் உண்மைத் தகவல்களை மறைத்துள்ளார். கச்சத்தீவு ராமநாதபுரம் சமஸ்தான மன்னர்களுக்கு சொந்தமாக இருந்தது. நமது மீனவர்கள் நெடுந்தீவு வரை மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும். கச்சத்தீவில் உள்ள தேவாலயத்துக்கு விசா இல்லாமல் சென்று வர வேண்டும் ஆகியவற்றை தமிழக பாஜக, மத்திய அரசுக்கு கோரிக்கையாக வைத்துள்ளது. கச்சத்தீவை மீட்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும்.
ராமேசுவரத்துக்கு உதான் திட்டத்தில் விமான நிலையம் உள்ளிட்டஅனைத்து விதமான வசதிகளை கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆனால் திமுக அரசு அதற்கான திட்ட அறிக்கையை அனுப்புவதில்லை என்றார்.
இதைத் தொடர்ந்து ராமநாதபுரத்தில் பாஜகவில் விவசாயிகள் இணையும் விழாவில் பங்கேற்றார். சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.