காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் அக்கட்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார். மே 16-ஆம் தேதியே காங்கிரஸ் கட்சியில் இருந்து தான் விலகிவிட்டதாகவும், சுதந்திரக் குரலாக ஒலிக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாநிலங்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்புமனுவை கபில் சிபல் இன்று (மே 25) தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கபில் சிபல், “நான் மே 16-ஆம் தேதியே காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிவிட்டேன். மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட சுயேட்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளேன்.
நான் எப்போதுமே நாட்டில் சுதந்திரமான குரலாக ஒலிக்க விரும்புகிறேன். மோடி ஆட்சியை அகற்ற வலுவான கூட்டணி வேண்டும். ஆசம் கான் இப்போதும், எப்போதும் எனக்கு உறுதுணையாக இருப்பதற்கு நன்றி” என்றார்.காங்கிரஸ் மீது அதிருப்தி கொண்டு செயல்பட்டு வந்த மூத்த தலைவர்கள் அடங்கிய ஜி23 குழுவில் கபில் சிபல் முக்கியப் பங்கு வகித்துவந்தார். இந்நிலையில், அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்தே விலகி இருக்கிறார்.
அண்மையில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை லக்னோவில் நேரில் சந்தித்தார் கபில் சிபல். இந்நிலையில், சமாஜ்வாதி ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக அவர் இன்று மனு தாக்கல் செய்தார். அப்போது அகிலேஷ் யாதவும் உடன் இருந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 111 எம்.எல்.ஏ.க்கள் சமாஜ்வாதிக்கு உள்ளனர். இவர்களின் ஆதரவோடு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலை கபில் சிபல் எதிர்கொள்வதால் வெற்றி நிச்சயம் என்ற சூழல் உள்ளது.
கபில் சிபலுக்கும் சமாஜ்வாதிக்கும் இடையே இதுவரை வழக்கறிஞர் என்ற முறையிலேயே தொடர்பு இருந்தது. அக்கட்சியின் மூத்த தலைவரான ஆசம் கான் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கபில் சிபல் தான் வாதாடி வந்தார். ஆசம் கானுக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து விலகும் பெரும் தலைகள்…
அண்மையில் குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் பதவியை ஹர்திக் படேல் ராஜினாமா செய்தார். அவர் பாஜகவில் இணையலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலிக்கும் எனக் கூறுகின்றனர்.
பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக கடந்த 2017 முதல் 2021 வரை பதவி வகித்தவர் சுனில் ஜாக்கர். 2012 முதல் 2017 வரையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். கடந்த ஆண்டு பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து அமரிந்தர் சிங் விலகியபோது, இவருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சரண்ஜித் சிங் சன்னி முதல்வரானார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சுனில் ஜாக்கர் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
இரண்டு பெரிய தலைகள் காங்கிரஸிலிருந்து விலகிய நிலையில் தற்போது மூத்த தலைவரான கபில் சிபலும் காங்கிரஸிலிருந்து விலகியிருக்கிறார்.