உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சிங்காரக் கவுரி அம்மன் தரிசன வழக்கு ஆகஸ்ட் 18, 2021-ல் தொடுக்கப்பட்டது.
வாரணாசியின் சிவில் நீதிமன்றம் விசாரித்த வழக்கிற்கு, கியான்வாபி மசூதியினுள் களஆய்விற்கு உத்தரவிடப்பட்டது. இதற்கு வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991 இன் கீழ் தடை கோரி, மசூதி நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதையடுத்து களஆய்வு உள்ளிட்ட அனைத்து மனுக்களையும் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இதன் இரண்டாம் நாள் விசாரணையை நீதிபதி அஜய் கிருஷ்ண விஷ்வாஸ் நேற்று முடித்தார்.
இதில், இந்துக்கள் தரப்பில் களஆய்வின் மனுவின் அறிக்கை நகலுடன் புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் கேட்கப்பட்டன. இவை, இரண்டும் மனுதாரர்களுக்கு அடுத்த விசாரணையின் போது அளிக்கப்படும் எனவும் நீதிபதி டாக்டர். அஜய் கிருஷ்ண விஷ்வாஸ் தெரிவித்தார்.
மேலும் அவர், மசூதி நிர்வாகத்தினர் சார்பில் வழக்கிற்குத் தடைகோரும் மனு மீது முதல் விசாரணை நாளை முதல் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். தடை கோரும் மனுவில் இந்து மற்றும் மசூதி தரப்பினர் தம் ஆட்சேபங்களை பதிவு செய்ய ஒரு வாரம் கால அவகாசமும் நீதிபதி கிருஷ்ண விஸ்வாஸ் அளித்தார். இத்துடன் அவர், மசூதியில் தொழுகை நடத்த வருபவர்களுக்கு கை, கால்கள் கழுவி ஒசு செய்ய மாற்று இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
கடந்த மே 16-ல் முடிந்த கடைசி நாள் களஆய்வில், மசூதியின் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக தகவல் அளிக்கப்பட்டது. இதை ஏற்ற வாரணாசி சிவில் நீதிமன்றம் அந்த ஒசுகானாவை சீல் வைத்து பாதுகாக்க உத்தரவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.