மருத்துவம், வேளாண்மை, சட்டம்மற்றும் தமிழ் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கும்மசோதா உட்பட 20 மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை தமிழகஅரசுக்கே வழங்கும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று அறிமுகம் செய்தார். பின்னர், 1976 -1998 காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்டு வழக்கிழந்த 91 சட்டங்களை நீக்குவதற்கான நீக்கறவு மசோதாவை அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தார். ஊராட்சி செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிநியமிக்கும் சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் பெரியகருப்பன் அறிமுகம் செய்தார்.
மேலும், தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு சட்டத்தை திருத்தம் செய்வதற்கான மசோதா, தமிழக அரசுக்கான நிதி ஒதுக்க மசோதாக்களை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிமுகம் செய்தார். அனைத்து மசோதாக்களும் ஆய்வு செய்யப்பட்டு,நிறைவேற்றப்பட்டன.
இதில், தமிழக நிதி ஒதுக்கம் தொடர்பாக 3 மசோதா, சம்பளம் வழங்கல் தொடர்பாக 1 மசோதா, நகராட்சி சட்டங்கள், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல் திருத்தம், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான மசோதாக்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திருத்த சட்ட மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன.
கூட்டுறவு 3, 4-ம் திருத்த சட்டமசோதா ஆய்வு செய்யப்பட்டபோது, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ‘‘மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக புதிய திருத்தம் கொண்டு வந்துள்ளீர்கள். மாநில சுயாட்சி குறித்து பேசும் திமுக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்க பிரதிநிதிகளின் அதிகாரத்தை குறைப்பது நியாயமா?’’ என்றார்.
‘‘ஆண்டுதோறும் சொத்து வரி, குடிநீர் வரியை திருத்தியமைக்க வகை செய்யும் ஊராட்சிகள் சட்டத் திருத்த மசோதா கொண்டுவரும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று எதிர்க்கட்சி கொறடா வேலுமணி கூறினார்.அதிமுக எதிர்ப்புக்கு இடையே,மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, தமிழ்நாடு வேளாண்மை, தமிழ் பல்கலைக்கழகம், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் மசோதாக்கள் ஆய்வு செய்யப்பட்டு ஏற்கப்பட்டன.
இதுதவிர, தமிழ்நாடு நீக்கறவு சட்ட மசோதா, அடுக்குமாடி குடியிருப்பு சொத்துரிமை மசோதா, தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி ,தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாடு திருத்த சட்ட மசோதாக்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மாநில ஆணைய திருத்தம், தமிழ்நாடு மதுவிலக்குதொடர்பான குற்றவாளிகள், கணினிவழி குற்றவாளிகள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசைப்பகுதி நில அபகரிப்பாளர்கள், காணொலி திருடர்களின் அபாயகரமான நடவடிக்கைகளை தடுத்தல் திருத்த சட்ட மசோதா என மொத்தம் 20 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.