குஜராத் சுயேட்சை எம்எல்ஏவும் அறியப்படும் இளம் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி நள்ளிரவில் அஸாம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜிக்னேஷ் மேவானி. குஜராத்தில் பாஜக-வுக்கு சவாலாக இருக்கும் மூன்று இளம் தலைவர்களில் முக்கியமானவர். குஜராத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களின் முகமாக அறியப்படுபவர். ஊனா தாலுகாவில் மாட்டுத் தோலை உரித்த தலித் குடும்பத்தினர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இவர் நடத்திய பேரணியில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டனர்.
குஜராத்தில் பட்டியலினக் குடும்பத்தில் பிறந்தவரான ஜிக்னேஷ் மேவானி மும்பையில் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். உனாவில் பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக அவர் ஒருங்கிணைத்த பேரணி தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. ராஷ்ட்ரிய தலித் அதிகாரி மஞ்ச் என்னும் அமைப்பைத் தொடங்கிப் பட்டியலின மக்களின் நில உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காகத் தொடர்ந்து குரலெழுப்பிவருகிறார்.
2017 குஜராத் சட்டமன்றத் தேர்தலை காங்கிரஸ் எதிர்கொண்டபோது வட்காம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானிக்கு ஆதரவளித்தது காங்கிரஸ். காங்கிரஸ் ஆதரவுடன் வட்காம் தொகுதியில் இருந்து சுயேச்சையாக போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி 84,785 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தொடர்ந்து தேசிய அளவில் கவனம் பெற்றுவந்த இளம்தலைவராக வலம்வந்தார்.
இதனிடையே, ஜிக்னேஷ் மேவானியை நேற்று இரவு 11:30 மணியளவில் இருந்து அஸ்ஸாம் போலீஸார் கைது செய்துள்ளனர். பாலன்பூர் சர்க்யூட் ஹவுஸில் இருந்தபோது அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். என்ன வழக்கு உள்ளிட்ட எந்த விவரங்களையும் அவர்கள் ஜிக்னேஷ் தரப்பினருக்கு தெரிவிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக பேசிய ஜிக்னேஷ் உடன் இருந்த சிலர், “கைது ஏன், என்ன வழக்கு என்பதைகூட சொல்லாமல் கைது செய்தனர். எஃப்ஐஆர் நகலையும் வந்தவர்கள் எங்களிடம் காண்பிக்கவில்லை. அசாமில் பதிவு செய்யப்பட்டுள்ள சில வழக்குகள் குறித்தே கைது என்பது மட்டுமே எங்களிடம் கூறினர்” என்றுள்ளனர்.
ஜிக்னேஷ் மேவானி கைதை பாலிவுட் நடிகை ஸ்வாரா பாஸ்கரும் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “ஜிக்னேஷ் நண்பர்களிடம் இருந்து அவர் கைது செய்யப்பட்ட தகவல் வந்தது. காவல்துறையினர் யாரிடமும் எப்ஐஆர் காப்பிகூட இல்லை. ஜிக்னேஷ் மொபைல் போனும் முடக்கப்பட்டுள்ளன. என்ன நடக்கிறது.. ஜிக்னேஷ் மேவானி ஏன் கைது செய்யப்பட்டார்” என்று ஸ்வாரா பாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.