டெல்லியில் வன்முறை நடந்த ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
டெல்லியில் உள்ள ஜஹாங்கிபுரி பகுதியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது வன்முறை வெடித்தது. ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது ஒரு தரப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். கலவரக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த வன்முறையில் போலீஸார் உட்பட பலர் காய மடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார். வன்முறைக்கு முக்கிய காரணமான அன்சர் என்பவர் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். அன்சர் உட்பட 5 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் நேற்று காலை புல்டோசர்கள் மூலம் அகற்றப்பட்டன. வீடுகள், கட்டிடங்கள் புல்டோசர்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்படுவதாக குற்றச் சாட்டுக்கள் எழுந்தன. இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களில் மத மோதல்கள் ஏற்பட்ட இடங்களில் ஒரு தரப்பினரின் வீடுகள் குறிவைத்து புல்டோசர்கள் மூலம் இடிக்கப்பட்டதைப் போல டெல்லியிலும் இடிக்கப்படுவதாகவும் இதை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இன்று விசாரணை
இந்த மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா ஆக்கிரமிப்புகளை அகற்ற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். ஆக்கிரமிப்புகளை இடிக்க கூடாது என்றும் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்றும் இந்த உத்தரவு உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். மனு மீது இன்று விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி அறிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா கரத் சம்பவ இடத்துக்கு நீதிமன்ற உத்தரவுடன் சென்று அதிகாரிகளிடம் காட்டினார். ஜஹாங்கிர்புரி மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, ஜஹாங்கிர்புரியில் கலவரத்தில் ஈடுபட்ட வர்களின் ஆக்கிரமிப்புக் கட்டிடங்களை கண்டறிந்து அவற்றை அகற்ற வேண்டும் என்று வடக்கு டெல்லி மாநகராட்சி மேயர் ராஜா இக்பால் சிங்குக்கு டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா கடிதம் எழுதினார்.
இதையடுத்து, அரசியல் உள்நோக்கத்துடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட இடங்கள் அகற்றப்படுவது வழக்கமான நடவடிக்கைதான் என்று மேயர் ராஜா இக்பால் சிங் தெரிவித்துள்ளார்.