செய்திகள்தமிழ்நாடு

பாலிடெக்னிக் முடித்தவர்கள் அண்ணா பல்கலை.பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக 2-ம் ஆண்டில் சேரலாம்: அமைச்சர் பொன்முடி

பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு சேரலாம். ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற சேர்க்கை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டு முதல் முதல்வரின் ஆணையின்படி, அண்ணா பல்கலைக்கழகத்திலும் பாலிடெக்னிக் படித்தவர்கள் இரண்டாம் ஆண்டில் சேரலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை மீண்டும் கூடியுள்ளது. இன்று வேளாணமை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு (கால்நடை பராமரிப்பு, பால்வளம்), மீன்வளம் மற்றும் மீனவர் நலன் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு துறையின்அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாசர், அனிதா ராதாகிருருஷ்ணன் ஆகியோர் பதிலளித்தனர்.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கேள்வி நேரத்துடன் தொடங்கியது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள் பதிலளித்தனர்.

அப்போது அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர், மரகதம் குமரவேல், “செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதியில், விவசாய மக்கள் அதிகம் வசிக்கின்ற பகுதியாகும். இந்த பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் அதிகமான கட்டணம் செலுத்தி தனியார் கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்படுகிறது. இவர்கள் அரசு கலைக் கல்லூரியிலோ, தொழில்நுட்ப படிப்புகளிலோ சேர வேண்டுமெனில் 60 கிமீ. தொலைவில் செங்கல்பட்டு செல்ல வேண்டியுள்ளது. அதுவும் குக்கிரமாங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இது சாத்தியமில்லை. இதனால், உயர்கல்வியை தொடர முடியாத நிலை உருவாகிறது. எனவே அச்சிறுப்பாக்கம் பகுதியில் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க அரசு முன்வருமா” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “தமிழகத்தைப் பொருத்தவரையில், மொத்தம் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் பாலிடெக்னிக்குகள் 34, அரசின் இணைவு பெற்ற கல்லூரிகள் 40 இருக்கின்றன. சுயநிதிக் கல்லூரிகள் 406 உள்பட மொத்தம் 509 பாலிடெக்னிக் கல்லூரிகள் இருக்கின்றன.

செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொருத்தவரை, தனியார் கல்லூரிகளில் மட்டும் மொத்தம் 5010 இடங்கள் உள்ளன. ஆனால், இதில் 1,879 பேர்தான் சேர்ந்துள்ளனர். மீதி 3031 காலியிடங்கள், இன்னும் காலியாகத்தான் இருக்கின்றன. உறுப்பினர் கூறியதைப் போல், கொஞ்சம் கட்டணம் அதிகமாக இருந்ததால் கூட மாணவர்கள் சேராமல் இருக்கலாம். அரசு பாலிடெக்னிக்குகளில்கூட மாணவர் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. இதனை எண்ணத்தில் கொண்டுதான், தமிழக முதல்வர் இந்த மானியக் கோரிக்கையில், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 5 புதிய பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

அதோடு பாலிடெக்னிக்குகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும். அதைவிட முக்கியம், பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு சேரலாம். ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற சேர்க்கை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு முதல் முதல்வரின் ஆணையின்படி, அண்ணா பல்கலைக்கழகத்திலும் பாலிடெக்னிக் படித்தவர்கள் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேரமுடியும்.

பாலிடெக்னிக் படிக்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். வேலைவாய்ப்பை பொருத்துதான் எந்த கல்லூரி படிப்பும் அதிகரிக்கிறது. இதில் முதல்வர் மிக முக்கிய கவனம் கொண்டு, தொழில் துறை, தொழிலாளர் நலத்துறை, உயர்கல்விதுறை ஒன்றாக சேர்ந்து இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள ஆணையிட்டுள்ளார். எனவே தமிழகத்தில் வரும்காலங்களில் பாலிடெக்னிக் வளரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தேவையின் அடிப்படையில் புதிய கல்லூரிகள் அமைப்பது தொடர்பான கோரிக்கைகள் கவனிக்கப்படும்” என்று கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button