செய்திகள்இந்தியா

‘ஆமாம் சொன்னேன்.. அதனால் என்ன?’ – பெட்ரோல் விலை குறித்து கேள்வி கேட்ட நிருபர்; எச்சரித்த பாபா ராம்தேவ்

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையுயர்வு குறித்து கேள்வி எழுப்பிய நிருபரை யோகாகுரு பாபா ராம்தேவ் எச்சரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை கடந்த 10 நாட்களில் லிட்டருக்கு ரூ.6.40 வரை உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில், தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையுயர்வு குறித்து கேள்வி எழுப்பிய நிருபரை யோகாகுரு பாபா ராம்தேவ் கடுமையான வார்த்தைகளால் எச்சரித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

யோகா குரு பாபா ராம்தேவ் ஹரியாணா மாநிலம் கர்னாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நிருபர் ஒருவர், “இந்த தேசத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.40, கேஸ் விலையை சிலிண்டருக்கு ரூ.300 என்று குறைப்பவர்கள் ஆட்சியை மக்கள் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியிருந்தீர்களே” எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ராம்தேவ், “ஆமாம் நான் தான் சொன்னேன். அதற்கென்ன? உன்னால் என்ன செய்ய முடியும்? இது மாதிரியான கேள்விகளைக் கேட்க வேண்டாம். நான் என்ன நீ கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல உனக்கு ஒப்பந்தப்பட்டிருக்கிறேனா?” என்று கண்டித்தார்.

ஆனால் நிருபரோ மீண்டும் அதே கேள்வியை முன்வைக்க இம்முறை பாபா ராம்தேவ் ஆத்திரமடைந்தார். “நான் தான் அன்று சொன்னேன். நீ வாயை மூடு. உன்னால் என்ன செய்ய முடியும். இது நல்லதற்கல்ல. இப்படிப் பேசாதே. நீ நல்ல பெற்றோருக்குத் தான் பிறந்திருப்பாய் என நினைக்கிறேன்” என்று காட்டமாகக் கூறினார்.

அவரது இந்த விமர்சனம் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் பாபா ராம்தேவ் விலையுயர்வை ஆதரித்துப் பேசுகையில், “எரிபொருள் விலை குறைந்தால் வரி கிடைக்காது என அரசாங்கம் சொல்கிறது. வரி கிடைக்காவிட்டால் தேசத்தை எப்படி வழிநடத்துவது. சாலைகள் எங்கிருந்து வரும்? அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தான் எப்படிக் கொடுக்க முடியும். விலைவாசி குறைய வேண்டும் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், மக்களும் கடுமையாக உழைக்க வேண்டுமல்லவா? நான் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை உழைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button