தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் பணியாற்றியபோது தவறான அறிக்கைகளை தாக்கல் செய்ததாகவும், இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரியும் சேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, பத்திரிகையாளர் என வழக்கு தொடர்ந்துள்ள சேகரன் ஒரு போலி பத்திரிக்கையாளர் என பொன் மாணிக்கவேல் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், மூத்த பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை 3 மாதங்களில் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தாங்கள் தொடர்ந்துள்ள வழக்கில் பிரஸ் கவுன்சில் அமைப்பது தொடர்பாக எந்த கோரிக்கையும் வைக்காத நிலையில், தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தங்களது வழக்கை ஆரம்பகட்டத்திலிருந்து மீண்டும் விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க வேண்டுமென்று நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுவதாக உத்தரவிட்டனர். பின்னர் சேகரன் தொடர்ந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதற்காக இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.