அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாபெரும் புத்தக பூங்கா அமைக்கப்படும் என்றும், அதற்கான நிலத்தை அரசு வழங்கும் என்றும் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக அரசு சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும், தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்களுக்கும், தமிழ் அமைப்பிற்கும், திங்களிதழுக்கும் என மொத்தம் 21 விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் விருதுகளை வழங்கி, விருது பெற்ற விருதாளர்கள் மற்றும் சிறப்புகள் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ் மொழி மற்றும் தமிழறிஞர்களுக்கு திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும், தற்போது தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் பட்டியலிட்டு பேசினார்.
அவர் பேசும் போது: “தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள் அவர்களது படைப்புகளின் மூலமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களது புத்தகங்களின் மூலமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அவர்களைப் போலவே இருக்கும் தமிழ்த் தொண்டர்களாகவும் அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
அத்தகைய தீரமிகு எழுத்தாளர்கள்,கனல் தெறிக்கும் பேச்சாளர்கள், களம் கண்ட போராளிகள், ஆய்வு அறிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் இந்த விருதுகளைப் பெற்றுள்ளார்கள். இந்த விருதுகளை இவர்களுக்கு வழங்கியதன் மூலமாக தமிழ்நாடு அரசு இன்னொரு மிக முக்கியமான பெருமையை அடைகிறது. வாழும் காலத்திலேயே, தகுதிசால் தமிழ்த் தொண்டர்களைப் பாராட்டியது தமிழ்நாடு அரசு என்ற விருதை தமிழக அரசு அடைகிறது. இது தான் மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.
யாருடைய பெயரால் விருதுகள் உள்ளதோ அவர்கள் வாழ்ந்த காலத்தில் எத்தகைய அங்கீகாரத்தை பெறத் தவறினார்களோ, அது போன்ற சூழல் இனி வருங்காலத்தில் இருக்கக் கூடாது என்பதை இன்றைய தமிழக அரசு தனது கொள்கையாக வைத்துள்ளது என்பதை இந்த மாபெரும் நிகழ்ச்சியின் மூலமாகத் உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அதனால் தான் திமுக ஆட்சியை தமிழாட்சியாக , தமிழின ஆட்சியாக நாங்கள் நடத்தி வருகிறோம். நாங்கள் என்றால் உங்கள் அனைவரையும் சேர்த்துத்தான் நான் சொல்கிறேன். விருதுபெற்ற பெருந்தகைகளையும் இணைத்துக் கொண்டே நான் சொல்கிறேன். தமிழ் வளர்ச்சி என்பது அந்த மொழியின் பெருமையைப் பேசுவது மட்டுமல்ல, மொழியைப் பெருமைப்படுத்தும் படைப்பாளிகளைப் போற்ற வேண்டும்.
கரோனா காலத்தில் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஏற்கெனவே ஜனவரி மாதம் தொடங்க இருந்த புத்தகக்கண்காட்சி தள்ளிப்போன காரணத்தால், அவர்களுக்கு இழப்பும் அதிகமாக ஏற்பட்டது. இதனை அரசாங்கம் கவனத்தில் கொண்டு, எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஒரு கோடி ரூபாய் வரைக்கும் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று அவர்கள் சொன்னார்கள். அதனை மனதில் வைத்துக்கொண்டு ஐம்பது லட்சம் ரூபாயை தமிழக அரசு அவர்களுக்கு வழங்கி இருக்கிறது. இந்த வகையில் இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் பதிப்பாளர், விற்பனையாளர்களுக்கு கிடைத்திருக்கிறது.
புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைக்க நான் சென்றபோது ஓர் அறிவிப்பைச் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால், அது தேர்தல் காலம். உள்ளாட்சி அமைப்புனுடைய தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரம். அதனை அந்த நேரத்தில் சொல்ல முடியவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அதற்கு இடம் தரவில்லை. தேர்தல் முடிந்துவிட்ட காரணத்தால் இந்த நிகழ்ச்சியின் மூலமாக அந்த அறிவிப்பைச் செய்கிறேன்.
அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாபெரும் புத்தக பூங்கா அமைக்கலாம் என்றும், அதற்கான நிலத்தை அரசு வழங்கும் என்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒருமுறை சொன்னார். அதற்கு புத்தக பூங்கா என்றும் அவரே பெயர் சூட்டினார்.
பபாசி அமைப்பைச் சார்ந்திருக்கக்கூடிய அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று அதற்கான நிலத்தைத் தேர்வு செய்து, அரசு வழங்கும் என்று இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நான் உறுதி அளிக்கிறேன். இந்த புத்தக பூங்கா உருவானால், அனைத்து புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம், அனைத்துப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஒரே இடத்தில் சந்திக்கக்கூடிய சூழல் நிச்சயம் உருவாகும். அதனை உருவாக்கித் தர அரசு தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் உறுதியாகச் செய்யும்.
விருது பெற்ற அனைவரையும் நான் பாராட்டுகிறேன், போற்றுகிறேன். வாழ்த்துகிறேன். உங்களது ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் இந்த அரசுக்கு எப்போதும் தேவை.இது உங்களது அரசு. அந்த உரிமையோடு நீங்கள் வழிகாட்டுங்கள்” என்று அவர் கூறினார்.