இலங்கையில் ஒரே நாளில் பெட்ரோல் ரூ. 50-ம் டீசல் ரூ.75-ம் உயர்த்தப்பட்டுள்ளது. 92 ஒக்டேன் 92 பெட்ரோல் விலை 43.5% அதிகரித்து 254 ரூபாயாகவும், டீசல் 45.5% அதிகரித்து 176 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. இலங்கையின் ஏற்றுமதியில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சுற்றுலாத்துறையை முடக்கி பொருளாதாரத்தைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டது. இதனால் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இலங்கையின் ஜிடிபி மதிப்பு மைனஸ் 16.3 சதவிதம் என வரலாறு காணாத கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அந்நியச் செலாவணி குறைந்ததால், இலங்கை பணத்தின் மதிப்பும் குறைந்தது. பணத்தின் மதிப்பு குறைந்ததால், ஒரு கிலோ பருப்பின் விலை ரூ.250, சர்க்கரை கிலோ ரூ.215, உருளைக் கிழங்கு கிலோ ரூ.300, பெரிய வெங்காயம் கிலோ ரூ.400 உளுந்து கிலோ ரூ.2,000 ஆகவும் வரையிலும் விற்கப்பட்டது.
இதுமட்டுமின்றி அந்நிய செலவாணி கையிருப்பு குறைவால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது.
இதுமட்டுமின்றி கச்சா எண்ணெய் வாங்க முடியாத சூழல் உள்ளது. இதனால் கச்சா எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டு அங்குள்ள பெட்ரோல், டீசல் நிலையங்களில், நீண்ட வரிசைகளில் வாகனங்கள் காத்திருப்பது வழக்கமாகி வருகின்றன.
இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்திடம் இருந்து இலங்கை அண்மையில் பெட்ரோல், டீசலை வாங்கியது. இந்தநிலையில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 130 டாலர்கள் வரை உயர்ந்துள்ளது. இதையடுத்து இலங்கையில் தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்து வருகிறது. லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தமது பெட்ரோல் -டீசல் விலையை நேற்று கடுமையாக உயர்த்தியது.
அனைத்து ரக டீசல் விலையை ஒரு லிட்டருக்கு ஒரே தடவையில் 75 ரூபாய் (இலங்கை ரூபாய்) உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோலவே அனைத்து ரக பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. பெட்ரோல்- டீசல் விலையை ஒரே தடவையில் இந்தளவிற்கு அதிகரித்துள்ளது இதுவே முதலாவது முறையாகும்.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால் 204 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் 92 ஒக்டேன் ரக பெட்ரோல் தற்போது 254 ரூபாயாக விற்கப்படுகிறது.
233 ரூபாயில் விற்கப்பட்ட ஒரு லிட்டர் 95 ஒக்டேன் ரக பெட்ரோல் தற்போது 283 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
139 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் ஒடோ டீசல் புதிய விலை 176 ரூபாயாகும்.
அதேபோன்று ரூ.174-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் சூப்பர் டீசல் விலை ரூ.254 ஆக உயர்ந்துள்ளது.
என்ஸ்ட்ரா ஒயில் டீசல் ஒரு லிட்டர் ரூ.145 -ல் இருந்து ரூ.220 வரை ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.