செய்திகள்உலகம்

மூன்றாம் உலகப் போர் மூண்டுவிடக்கூடாது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் சூழலில் அமெரிக்காவும், நேட்டோப் படைகள் ரஷ்யாவுக்கு எதிராகக் களமிறங்கினால் அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும். அப்படியொன்று நடந்துவிடாமல் தடுப்பது அவசியம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கி இன்றுடன் 16 நாட்கள் ஆகின்றன. இதனிடையே இருதரப்பும் பெலாரஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவும், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமைத்ரோ குலேபாவும் நேற்று முன்தினம் துருக்கி நாட்டில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், “ரஷ்யா, உக்ரைன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்த முழுவிவரங்களை பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்” என்று அதிபர் புதின் தெரிவித்திருக்கிறார்.
இச்சூழலில் உக்ரைனும் அமெரிக்காவும் இணைந்து உயிரி ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக ரஷ்ய அதிபர் புதின் குற்றஞ்சாட்டினார். மேலும், இவ்வாறாக செய்து மாஸ்கோவை மூன்றாம் உலகப் போருக்கு தூண்ட வேண்டாம் என எச்சரித்தார்.

அதற்கு பதிலளித்த பைடன், ரஷ்யா தான் உக்ரைன் மீது ரசாயன ஆயுடங்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டு வருகிறது. ஒருவேளை ரஷ்யா அவற்றைப் பயன்படுத்தினால் அதற்கான விலையைக் கொடுக்கு வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார். கூடவே ரஷ்யா மீது மேலும் பல தடைகள் அறிவிக்கப்பட்டன. ரஷ்யாவுடனான இயல்பான வர்த்தக உறவை முறிப்பதாகவும் பைடன் அறிவித்தார்.

உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள், டாங்கர்கள் எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியனவற்றை வழங்கி வருகிறது. ஆனால், அமெரிக்கா மற்றும் நேட்டோ வீரர்களை களத்தில் இறக்கப்போவதில்லை என்று மீண்டும் பைடன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் ரஷ்யாவுக்கு எதிராக நேரடியாக களமிறங்க மாட்டோம். அது மூன்றாம் உலகப் போருக்கு வித்திடும். அதை நாங்கள் தவிர்க்க விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button