செய்திகள்தமிழ்நாடு

அனைத்து தரப்பினருக்கும் மருத்துவ வசதி கிடைக்க சுகாதார சேவைகள் உரிமை சட்டம்

தமிழகத்தில் அனைத்து தரப்புக்கும் மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கான சுகாதார சேவைகள் உரிமை சட்டம் கொண்டு வரப்படவுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சுகாதார சேவைகள் உரிமைச் சட்ட முன்வடிவு குறித்த கலந்தாய்வு சென்னையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்தாய்வை தொடங்கி வைத்து பேசியதாவது:

தமிழக சுகாதாரத் துறையின் சாதனையாக இன்னொரு புதிய திட்டத்துக்கான சுகாதார சேவைகள் உரிமைச் சட்ட முன்வடிவு ஒன்றை தயாரிக்க வேண்டும் என்ற வகையில் பொருளாதார நிபுணர்கள், மருத்துவ நிபுணர்கள் கொண்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

குழந்தைகள், வயதானவர்கள், மகளிர், மனவளர்ச்சிக் குன்றியோர், மாற்றுத்திறனாளிகள் என எல்லாத்தரப்பினருக்கும் போதுமான அளவு சுகாதாரம், மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கான உரிமை ஆகும். அந்த உரிமைகளை நிறைவேற்றுவதற்கான கடமையும் அதை உணர்த்துவதற்கான சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படவுள்ளது. இதேபோல், சட்டமுன்வடிவு தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலும் நடைமுறையில் இருக்கிறது.

இந்தியாவில் அஸ்ஸாமில் அமலில் வந்து இருந்தாலும், இன்னமும் பயன்பாட்டுக்கு வரவில்லை. எனவே, இந்தியாவில் முதன் முறையாக தமிழகத்தில் தொடங்கப்பட்டு இருக்கிறது. தேசிய சூழ்நிலையில், தமிழகம் ஏற்கெனவே நாட்டின் பல்வேறு சுகாதார அமைப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

2021 ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை 59 லட்சத்து 98,325 பேர் பயனடைந்துள்ளனர். 2021 டிசம்பர் 18-ம் தேதி தொடங்கப்பட்ட இன்னுயிர் காப்போம் திட்டத்தால் சாலைகளில் விபத்துக்குள்ளானவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் சுகாதார சேவைகளை வலுவடைய செய்யும் வகையில் இந்த சுகாதார சேவைகள் உரிமைச் சட்ட முன்வடிவு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. அதன் பிறகு செயலாக்கத்துக்கு கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button