வாரணாசியில் வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுவதாக, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
ஏழு கட்டங்களாக உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று நிறைவடைந்தது. இத்தேர்தல் முடிவுகள் மார்ச் 10 அன்று வெளியாகவுள்ளன. நேற்று வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில், பாஜக பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாரணாசியில் வேட்பாளர்களுக்குத் தெரிவிக்காமலேயே, வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுவதாக, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, அவர் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், “பாஜகதான் வெல்லும் என்பது போன்ற தோற்றத்தை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் உருவாக்க முயலுகின்றன. இது ஜனநாயகத்திற்காக நடைபெறும் கடைசி போராட்டம். வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து வேட்பாளர்களிடம் தெரிவிக்கப்படாமலேயே வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
தேர்தல் ஆணையம் இதனை கவனிக்க வேண்டும்.
இம்மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச்செல்லப்படுவது குறித்து நாம் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். இது திருட்டு. நம் வாக்குகளை நாம் காப்பாற்ற வேண்டும். நாம் இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம். ஆனால், அதற்கு முன்னால் ஜனநாயகத்தைக் காப்பாற்ற நான் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.