கார்கீவ் அருகே நடைபெற்ற சண்டையில், ரஷ்ய ராணுவத்தில் உயர் பொறுப்பில் உள்ள தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக, யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது குறித்து, ரஷ்ய அதிகாரிகள் கருத்து தெரிவிக்கவில்லை.
யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கொல்லப்பட்ட ரஷ்ய ராணுவ வீரர், மேஜர் ஜெனரல் விடாலி கெராசிமோவ் என்றும், அவர் ரஷ்யாவின் 41வது ராணுவப் பிரிவின் முதல் துணை கமாண்டர் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், மூத்த ரஷ்ய ராணுவ அதிகாரிகள் சிலர் கொல்லப்பட்டுள்ளதாகவும், சிலர் காயமடைந்துள்ளனர் எனவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த விடாலி கெராசிமோவ் இரண்டாம் சேசென் போரிலும், சிரியாவில் ரஷ்ய ராணுவ நடவடிக்கையிலும் ஈடுபட்டவர் என, யுக்ரேன் உளவுப்பிரிவு தெரிவித்துள்ளது. “கிரைமியாவை திரும்பப் பெற்றதற்காக” அவர் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
விடாலி கெராசிமோவ் என கூறப்படும் ஒருவரின் புகைப்படம் ஒன்றையும் யுக்ரேன் அதிகாரிகள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
கெராசிமோவ் இறப்பு குறித்து, பிபிசி வெளியுறவு நிருபர் பால் ஆடம்ஸ் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளவை:
“இந்த தேவையற்ற போரின் விளைவு என்னவாக இருந்தாலும், ரஷ்ய ராணுவத்திற்கு இது ஒரு தவிர்க்க முடியாத பேரழிவாகும். இதன் முடிவுகள் பேரழிவு தரக்கூடியவை. “வெற்றி” எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்பது கடினமாகிக்கொண்டே இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.