சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் – சித்ரா தம்பதியின் மகன் பி.இ. பட்டதாரி கோகுல்ராஜ் . பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவரும், கல்லூரியில் உடன் படித்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த சுவாதி என்ற மாணவியும் நெருங்கி பழகி வந்தனர்.
கடந்த 23.6.2015ம் தேதியன்று,வீட்டில் இருந்து கல்லூரிக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறிச்சென்றவர் மறுநாளான 24.6.2015ம் தேதியன்று, கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் முக்கிய தடயங்கள் கிடைத்தன. அதன்பேரில், சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கைதான நபர்களில் ஜோதிமணி என்பவர் குடும்பத்தகராறில் கொல்லப்பட்டார். ஜாமினில் சென்ற அமுதரசு தலைமறைவானார்.
இந்நிலையில் இவ்வழக்கினை கோகுல்ராஜ் தாய் சித்ரா தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், நாமக்கல் நீதிமன்றத்திலிருந்து, மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ்,அவரது சகோதரர்கள் அருண், குமார் மற்றும் சதிஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10பேர் குற்றவாளியாகவும், சங்கர் , அருள்செந்தில், செல்வகுமார் தங்கதுரை , சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்வதாக உத்தரவிட்டார்.
“ 10பேரை குற்றவாளியாக அறிவித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தீர்ப்புக்காக உயிரோடு காத்திருந்தேன். 10பேருக்கும் தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என கோகுல்ராஜின் தாயார் சித்ரா கண்ணீர் மல்க கூறினார் .