கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாக கூறி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தேனி மாவட்ட ஆவின் தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரருமான ஓ.ராஜாவை கட்சியிலிருந்து நீக்கி, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: ”கட்சியின் கொள்ளை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால், தேனி மாவட்ட ஆவின் தலைவர் ஓ.ராஜா, தேனி மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் எஸ்.முருகேசன், தேனி மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் வைகை .கருப்புஜி, கூடலூர் நகர புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் எஸ்.சேதுபதி ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சி தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், நகர்ப்புற தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில் அதிமுகவில் சசிகலா, தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலர் சையதுகான், முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த தீர்மானம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி சேலம், எடப்பாடியில் உள்ள தனது வீட்டில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை உள்ளிட்டோர் பங்கேற்றதாக தெரிகிறது. கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி கூறுகையில் ‘‘சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக பலத்த தோல்வியை தழுவியுள்ளது. இதனால் தொண்டர்கள், நிர்வாகிகள் பெரும் கவலை கொண்டுள்ளனர். அவர்களின் மனச்சோர்வை போக்க அதிமுகவில் சசிகலா மற்றும் தினகரனை இணைக்க வேண்டும். அவர்களது தலைமையில் கட்சி செயல்பட வேண்டும். அதிமுகவுக்கு ஒற்றை தலைமையே சரியானது. இரு தலைமைகள் இருப்பதால் இரு கோஷ்டிகள் போல செயல்படுகின்றனர்’’ எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், தென் மாவட்டங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா நேற்று திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், அங்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரின் சகோதரரும், தேனி மாவட்ட ஆவின் தலைவருமான ஓ.ராஜா சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.