செய்திகள்இந்தியாஉலகம்

யுக்ரேனில் மருத்துவம் படிக்கும் உ.பி. ஊராட்சித் தலைவர்: யார் இந்த வைஷாலி யாதவ்?

25 வயதான வைஷாலி யுக்ரேனில் உள்ள இவானோ பிரான்கிவஸ்க் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.  அவருக்கு ஒரு அரசியல் அடையாளமும் உண்டு.

ஹர்தோய் மாவட்டத்தின் விகாஸ் தொகுதியின் சாண்டியில் உள்ள தேரா புர்சௌலி கிராம ஊராட்சித் தலைவராகவும் அவர் உள்ளார். அதாவது, இவர் யுக்ரேனில் எம்பிபிஎஸ் படிக்கும் ஒரு பெண் ஊராட்சித் தலைவர். யார் இந்த வைஷாலி? ஏன் இப்படி செய்கிறார்?

ரஷ்யாவின் யுக்ரேன் மீதான தாக்குதலையடுத்து, அங்குள்ள நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவர்கள் உதவி கேட்டு தங்கள் குடும்பத்தினருக்கு வீடியோக்களை அனுப்பி வருகின்றனர். பிப்ரவரி 24 அன்று தனது விமானம் ரத்து செய்யப்பட்ட பிறகு வைஷாலியும் தனது தந்தைக்கு இதே போன்ற வீடியோவை அனுப்பினார்.

இதில் அவர் கூறியதாவது: “நான் யுக்ரேனின் இவானோ பிரான்கிவஸ்க் தேசிய மருத்துவ பல்கலைக்கழக மாணவி. காலை முதலே இங்கு பீதியான சூழல் நிலவுகிறது. எல்லோரும் அவரவர் இல்லங்களில் அடைபட்டுக்கிடக்கிறோம். யாரும் வெளியே வரமுடியாத அளவுக்கு வெளியே குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் மிகவும் பீதியில் உள்ளனர். எங்கள் பல்கலைக்கழகத்தில் பல இந்திய மாணவர்கள் உள்ளனர்.

இந்திய அரசு உதவி செய்தால்தான் தாங்கள் அங்கிருந்து தப்ப முடியும் என்பது அவர்கள் அனைவரது கருத்தாகவும் உள்ளது. நாங்கள் பயணம் செய்ய விமானங்களில் பதிவு செய்திருந்தோம். ஆனால் அந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன. இப்போது எப்படி வருவோம்? இந்திய அரசு ஏதாவது செய்து இங்குள்ள மாணவர்களை மீட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எங்களால் எந்தப் பொருளையும் வாங்க வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. பொருட்கள் கையிருப்பில் இருக்கும் வரை வீட்டில் இருப்போம். அதற்குப் பிறகு என்ன ஆகும் என்று சொல்வதற்கில்லை. எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று அந்த் அவீடியோவில் தெரிவித்திருந்தார் வைஷாலி.

இந்நிலையில், வைஷாலி இந்தியா திரும்பியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. வைஷாலியின் தந்தை மகேந்திர யாதவ் ஹர்தோய் மாவட்டத்தின் முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர்.

உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவரின் வேண்டுகோளின் பேரில் வைஷாலியிடம் இருந்து இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார். பின்னர் அந்த வீடியோ வைரலானது.

வைஷாலி வீடியோ வைரலானது எப்படி?

பிகாரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ அனில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “யுக்ரேனில் மருத்துவ மாணவி என்று கூறிக்கொண்டு அரசின் மீது குற்றம்சாட்டி வீடியோ எடுத்த மாணவி வைஷாலி யாதவ், தந்தை மகேந்திர யாதவ் ஆகியோர் போலீசில் சிக்கியுள்ளனர். அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காகத் தந்தையின் விருப்பத்தின் பேரில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது. வைஷாலியின் தந்தை சமாஜ்வாதி கட்சியின் தலைவர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இப்போது இந்த ட்வீட் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

டெல்லியில் உள்ள பாஜக ஊடகப்பிரிவு தலைவர் நவீன் ஜிண்டாலும், சமாஜ்வாதி கட்சியை குறிவைத்து, வைஷாலியின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார், “எஸ்பி தலைவர் மகேந்திர யாதவின் மகள் வைஷாலி யாதவ், தனது தந்தையின் உத்தரவின் பேரில் மோடி அரசாங்கத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்த, தனது வீட்டில் இருந்து வீடியோ எடுத்துள்ளார். சிவப்பு தொப்பி என்றால் அபாய சிவப்பு எச்சரிக்கை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பிரபலமான உண்மைச் சரிபார்ப்பு இணையதளமான ஆல்ட் நியூஸ், வைஷாலியின் வீடியோவைச் சரிபார்த்துக் கண்டறிந்தது. அதில், அவர் ஹர்தோய்-ல் இல்லை என்றும் ருமேனியாவில் இருப்பதாகவும் கூறியுள்ளது.

இது குறித்து தந்தை மகேந்திர யாதவ் கூறும்போது, ​​”அவர் இந்தியாவில் இருப்பதாகவும் அவரை போலீசார் கைது செய்தபோது, ​​இதை நான் வெளியிட்டேன் என்றும் தந்தை சமாஜ்வாதி கட்சித் தலைவர் என்றும் மத்திய அரசுக்கு அவப்பெயர் உருவாக்கும் நோக்கத்தில் இது செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.” என்று தெரிவித்தார்.

‘நான் ருமேனியாவில் இருக்கிறேன், இந்தியாவில் இல்லை. நாங்கள் கைது செய்யப்படவில்லை’ என்று மற்றொரு வீடியோவை வெளியிடுமாறு அவருக்குத் தெரிந்த பத்திரிகையாளர் ஒருவரைக் கேட்டுக் கொண்டதாக அவர் கூறுகிறார்.

கைது செய்யப்பட்டதாகப் பரவிய வதந்தியை காவல்துறையும் மறுத்துள்ளது.

ஹர்தோய் மாவட்ட எஸ்எஸ்பி ராஜேஷ் துவிவேதி கூறுகையில், “எனக்குத் தெரிந்த வரையில், அந்த மாணவி தற்போது ருமேனியாவில் இருப்பதாகவும், தனக்கு உதவி கோரி அவர் வீடியோவை வெளியிட்டதாகவும், இது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததாகவும் வந்த தகவல சரியில்லை” என்றும் கூறியிருந்தார்.

வைஷாலியின் மற்றொரு பதிவு

தான் கைது செய்யப்பட்டதாக ஒரு போலித் தகவல் வைரலாகப் பரவி வருவதால் வருத்தமடைந்த ருமேனியாவில் உள்ள வைஷாலி யாதவ் மற்றொரு பதிவை அனுப்பியுள்ளார்.

இதில் அவர் கூறியதாவது, “நான் வைஷாலி யாதவ், சில நாட்களுக்கு முன்பு நான் யுக்ரேனில் சிக்கியிருப்பதாக இந்திய அரசிடம் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டேன். எங்களை இங்கிருந்து வெளியேற்ற இந்திய அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்று கோரியிருந்தேன்.

ஆனால். அந்த வீடியோ இந்தியாவில் தவறாகப் பரப்பப்படுகிறது. பாஜக அரசுக்குக் களங்கம் விளைவிக்கவே இது செய்யப்படுவதாகவும் இந்தியாவில் இருந்துகொண்டே இது போன்ற வீடியோக்களை வெளியிடுவது முற்றிலும் தவறானது. எல்லா விஷயங்களையும் அரசியல் ஆக்க வேண்டிய அவசியமில்லை.

நான் யுக்ரேனில் இருந்தேன், ஆனால் இப்போது நான் பாதுகாப்பாக இருக்கிறேன். ருமேனியாவுக்கு வந்துவிட்டேன், விரைவில் நான் இந்தியாவுக்கு வருவேன். சரியான விஷயம் தெரியாவிட்டால், அதைப் பரப்புவது சரியல்ல. எல்லாவற்றிலும் அரசியலைச் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கும் இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் வரலாம். இன்று எனக்கு வந்திருக்கிறது. இங்கே மாட்டிக்கொண்டவர்கள் எவ்வளவு பிரச்சனையில் இருக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். அவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, நீங்கள் அந்த விஷயத்தை அங்கே தவறாகப் பரப்பி வருகிறீர்கள். பரப்பப்படும் விஷயம் முற்றிலும் தவறு என்பதைச் சொல்லவே இந்த வீடியோவை உருவாக்கியுள்ளேன். எனவே அந்த விஷயங்களைப் பரப்பாதீர்கள். அவற்றை ஆதரிக்காதீர்கள்.”

வைஷாலியின் ஊராட்சித் தலைவர் பதவி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

வைஷாலி கைது செய்யப்பட்டதாகப் பரவும் புரளிகள் நிற்பதற்கு முன்னர், மேலும் ஒரு சர்ச்சை எழுந்தது. தற்போது வைஷாலியின் ஊராட்சித் தலைவர் பதவி தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக ஹர்தோய் நிர்வாகம் பேச ஆரம்பித்துள்ளது.

ஹர்தோய் மாவட்ட ஆட்சியர் வந்தனா திரிவேதியின் அறிக்கை, “வைஷாலி, தேரா புர்சௌலி ஊராட்சித் தலைவர் என்பது கவனத்துக்கு வந்துள்ளது, அது குறித்துப் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் விதிகளின்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும்”.

பின்னர், மாவட்ட ஊராட்சி அதிகாரி கிரீஷ்சந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “விகாஸ் கண்ட் ஏ.டி.ஓ.,விடம் முழு அறிக்கை கேட்கப்பட்டு, அறிக்கை கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சி சார்பாக நடந்த பணிகள் குறித்து விசாரிக்கப்படும்,” என்று குறிப்பிட்டார்.

வைஷாலியின் தந்தை மகேந்திர யாதவிடம் நாங்கள் பதில் கேட்டபோது, ​​”வைஷாலி ஆண்டுக்கு இருமுறை வந்து தலைமைக் கூட்டத்தை நடத்தி முடிவுகளை எடுப்பார், நிர்வாகம் விரும்பினால் விசாரணை செய்து கொள்ளட்டும்” என்றார்.

“எங்கள் ஊராட்சி விதிகளில், தலைவர் ஆண்டுக்கு இரண்டு முறை திறந்தவெளி கூட்டம் நடத்த வேண்டும் என, தெளிவாக எழுதி உள்ளது. பண விவகாரங்களுக்கு, கிராமத்தைச் சேர்ந்த ஒருவரைப் பொறுப்பாளராகத் தேர்வு செய்துள்ளார். அந்த வேலையை பார்த்து, மொபைலில் பேசுகிறார். வாட்ஸ்அப்பில் பேசுகிறார், அதன் பிறகு அவள் பணம் செலுத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கிறார்,” என்று அவர் கூறுகிறார்.

வைஷாலிக்கும் அவரது தந்தைக்கும் சமாஜ்வாதி கட்சியுடன் தொடர்புண்டா?

மகேந்திர யாதவ் கூறுகையில், தான் சமாஜ்வாதி கட்சியில் இல்லை என்றும், பல ஆண்டுகளுக்கு முன்பே கட்சியை விட்டு வெளியேறி விட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால், அவரது மனைவி சமாஜ்வாதி ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்டார்.

வைஷாலி எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இல்லை. மகேந்திர யாதவ், உள்ளூர் பெரும்புள்ளியான நரேஷ் அகர்வாலுடன் சேர்ந்து பாஜகவில் ஈடுபாடு கொண்டிருப்பதாகவும் ஆனால் முறையாகக் கட்சியில் சேரவில்லை என்றும் கூறுகிறார்.

வைஷாலி தொடர்பான சர்ச்சையில் மகேந்திர யாதவ், “இப்போது பாஜகவினர் தான் நாங்கள் சமாஜ்வாதி கட்சியினர் என்றும் யாதவர்கள் என்றும் கூக்குரலிடுகின்றனர். யாதவர்களாயிருந்தால் சமாஜ்வாதியில் தான் இருக்க வேண்டும் என்பது பாஜகவின் சிந்தனை. அதனால் நாங்கள் சமாஜ்வாதியைச் சார்ந்தவர்களாகவே உணர்கிறோம். ஆனால் நாங்கள் முறையாக கட்சியில் உறுப்பினராக இல்லை. நான் பாஜகவிலும் உறுப்பினராக இல்லை. நரேஷ் அகர்வால் பாஜகவில் சேர்ந்தபோது எனது பெயரும் அடிபட்டது,” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button