உக்ரைனின் கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதை இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுச் செயலர் அரிந்தம் பாக்சி தனது ட்விட்டர் பக்கத்தில், உக்ரைனில் உள்ள இந்தியர்களுடன் அங்குள்ள நமது தூதரகம் தொடர்பில் உள்ளது.உக்ரைன் அதிகாரிகளின் உதவியுடன் நேற்று நிறைய இந்திய மாணவர்கள் கார்கிவ்வில் இருந்து வெளியேறினர். இதுவரை இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருப்பதாக எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை. எந்த ஒரு மாணவரும் இத்தகைய புகாரைக் கூறவில்லை. கார்கிவ் மற்றும் சில நகரங்களில் இருந்து இந்திய மாணவர்களை நாட்டின் மேற்குப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்யுமாறு நாங்கள் உக்ரைன் அதிகாரிகளிடம் வேண்டியுள்ளோம்.
உக்ரைன் அருகில் உள்ள ஹங்கேரி, ருமேனியா, மால்டோவா, போலந்து, ஸ்லோவாக்கியா உள்ளிட்ட நாடுகளுடன் இந்திய மாணவர்களை மீட்கும் பணி குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். கடந்த சில நாட்களில் நிறைய இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதற்காக நாங்கள் உக்ரைன் அதிகாரிகளுக்கு நன்றி கூறுகிறோம்.
அதேபோல், இந்திய மாணவர்களை இன்முகத்துடன் வரவேற்று அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ள உக்ரைனின் மேற்கு எல்லையை ஒட்டிய அண்டை நாடுகளுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்றிரவு பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினுடன் பேசினார். கார்கிவ் உள்ளிட்டப் பகுதிகளில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்பது குறித்து ஆலோசித்தார்.
அந்தப் பேச்சுவார்த்தை நடந்த சில மணி நேரங்களில், ரஷ்ய ராணுவ செய்தித் தொடர்பாளர் ஓர் அதிர்ச்சிப் பேட்டியை அளித்தார். “அப்போது அவர், எங்களுக்குக் கிடைத்தத் தகவலின்படி உக்ரைன் அதிகாரிகள் கார்கிவில் பெருமளவிலான இந்திய மாணவர்களை கட்டாயமாக தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். பெல்கிரேடுக்கு அவர்கள் செல்லவிருந்த நிலையில் அவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் அனைத்து உதவிகளையும் செய்ய ரஷ்யா தயாராக இருக்கிறது” என்று கூறினார்.
இந்தச் செய்தி, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களின் பெற்றோர் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உக்ரைனின் கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்படவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் கார்கிவ் நகரில் இருந்து தமிழ் செய்தி தொலைக்காட்சிகளுக்கு வீடியோக்கள் மூலம் இந்திய மாணவர்கள் தங்களின் நிலையைப் பகிர்ந்துள்ளனர். எல்லைகளுக்கு வர எவ்வித போக்குவரத்து வசதியும் இல்லை. ஓரிரு ரயில்கள் இயக்கப்படும்போது அதில் ஏற உக்ரைன் அதிகாரிகளும், மக்களும் அனுமதிப்பதில்லை. எங்களை எட்டி உதைத்து வெளியே தள்ளிவிடுகின்றனர் என்று மாணவர்கள் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சில வீடியோக்களும் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.