செய்திகள்உலகம்

“எங்களுடன் நீங்கள் துணை நிற்பதை நிரூபியுங்கள்” – ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஆவேச உரை

ரஷ்ய ராணுவ நடவடிக்கை 6-வது நாளாக தொடர்ந்துள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் உரை நிகழ்த்தினார். தனது உரையில், “கார்கிவ் மீதான தாக்குதல்கள் ரஷ்யாவால் மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதம். கார்கிவ் மத்திய சதுக்கத்தில் நிகழ்த்திய ரஷ்ய தாக்குதல் ஒரு போர்க் குற்றம் மட்டுமின்றி, சுயநினைவுடன் மக்களைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட அழிவுகர செயல். வெளிப்படையாக ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடாக மாறியுள்ளது. எங்களின் பொருளாதாரத்தை ரஷ்யா முற்றிலும் அழித்துவிட்டது. எங்கள் நகரங்கள் அனைத்தும் தடுக்கப்பட்டுள்ள போதிலும், எங்களின் நிலத்துக்காகவும், சுதந்திரத்தூக்கவும், வாழ்க்கைக்காகவும் போராடி வருகிறோம்.

யாரும் எங்களைப் பிரித்துவிட முடியாது. எங்களின் மன உறுதியை குலைக்க முடியாது. ஏனென்றால், நாங்கள் உக்ரைனியர்கள், வலிமையானவர்கள். உக்ரைனியக் குழந்தைகளைக் குறிவைத்து ரஷ்யா தாக்கி வருகிறது. நேற்று வரை 16 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். உக்ரைனில் நடத்த்ப்பட்டு வரும் ஆயுதம் ஏந்திய கொடூரமான செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மனிதகுலம் இனி தற்காத்துக் கொள்ள முடியும் என்பதை நாம் காட்ட வேண்டும். நீங்கள் (ஐரோப்பிய யூனியன்) இல்லாமல், உக்ரைன்தனிமையில் இருக்கும். நான் காகிதத்தில் இருந்து இதனைப் படிக்கவில்லை. அந்தக்கட்டம் எல்லாம் எப்போதோ முடிந்துவிட்டது. இப்போது உயிர்களை காப்பாற்றிக்கொள்வதில்தான் எங்களின் கவனம் உள்ளது. முடிந்த அளவு எங்கள் பலத்தை இங்கே நிரூபித்துவிட்டோம்.

இந்தப் போரில் உக்ரைன் சந்தித்துள்ள சோகம், மிக விலை உயர்ந்தது. எங்களின் சிறந்த மக்களை, தனித்துவமானவர்களை இழந்துள்ளோம். உங்களுடன் சமமாக உயிர் வாழ்வதற்காக, எங்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. நாங்களும் உங்களைப் போல தான் இருக்கிறோம். ஐரோப்பிய ஒன்றியம் எங்களுடன் துணை நிற்பதை நிரூபியுங்கள். எங்களை தனித்துவிட்டு போகமாட்டீர்கள் என நிரூபியுங்கள். நீங்கள் உண்மையிலேயே ஐரோப்பியர்கள் என்பதை நிரூபியுங்கள். அப்போது தான் எங்களை சுற்றியுள்ள இருளைக் கடந்து நாங்கள் மரணத்தை வெல்ல முடியும். ஐரோப்பிய ஒன்றியம் எங்களுடன் மிகவும் வலுவாக இருக்கும் என்று நம்புகிறோம்” என்று உருக்கமாக பேசியுள்ளார்.

ஜெலென்ஸ்கியின் இந்த உரைக்கு பின் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். ரஷ்யா உடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை கோரி விண்ணப்பத்தை முறையாக நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு ஒரு நாளுக்குப் பிறகு ஜெலென்ஸ்கி இன்று ஆற்றிய உருக்கமான உரை சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துவருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button