நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தற்போது முழுவதுமாக வெளியாகியுள்ளது.
21 மாநகராட்சிகளையும் திமுக தன்வசப்படுத்தியுள்ளது. அதேபோல 138 நகராட்சிகளில் செங்கோட்டை நகராட்சியைத் தவிர ஏனைய 137 இடங்களிலும் திமுக வெற்றிபெற்றுள்ளது. பேரூராட்சிகளிலும் 400க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது.
திமுகவுக்கு இந்த தேர்தலில் இதுவரை கிடைக்காத வகையில் வரலாற்று வெற்றி கிடைத்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. 40 ஆண்டுகளாக வெற்றிபெற முடியாத கோபி நகராட்சியில் தொடங்கி, 53 ஆண்டுகளாக வெற்றி கிடைக்காமல் இருந்த பரமக்குடி நகராட்சி வரை அனைத்தையும் தன்வசப்படுத்தி இந்த தேர்தலில் புதிய சாதனை படைத்துள்ளது திமுக.
கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 71.3 சதவீதமும், திமுக 15.9 சதவீத இடங்களிலும் வெற்றிபெற்றன. ஆனால் தற்போது எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தற்போது 12 சதவீத இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று, கடந்த தேர்தலில் திமுக பெற்ற வெற்றி சதவீதத்தை விடக் குறைவாக இடங்களைப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.