தனியார் பால் விற்பனை விலை உயர்வு மற்றும் தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக உருவாக்கப்படும் ஆவின் பாலுக்கு உருவாக்கப்படும் செயற்கையான தட்டுப்பாட்டை தடுக்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 2கோடி லிட்டர் பால் உற்பத்தியாகும் நிலையில் மக்களின் தினசரி தேவையில் சுமார் 84% வரை தனியார் பால் நிறுவனங்களும், வெறும் 16% தேவையை ஆவின் நிறுவனமும் பூர்த்தி செய்து வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சிறு, சிறு தனியார் பால் நிறுவனங்கள் கடந்த சில தினங்களுக்கு முன் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 2.00ரூபாய் வரை தன்னிச்சையாக உயர்த்திய நிலையில் தமிழகத்தில் பெரும்பங்கு வகிக்கும் ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக வெள்ளிக்கிழமை (25.02.2022) முதல் பால், தயிருக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2.00ரூபாய் உயர்த்துவதாக தன்னிச்சையாக சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ள மக்கள் விரோத போக்கினை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா நோய் பெருந்தொற்று காரணமான ஊரடங்கினால் பால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டதை காரணமாக வைத்து அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 15.00ரூபாய் முதல் 20.00வரை குறைத்து ஒரு லிட்டர் பாலினை குறைந்தபட்சம் 18.00ரூபாய் முதல் அதிகபட்சமாக 22.00ரூபாய் வரை மட்டுமே விலையாக கொடுத்து விவசாய பெருமக்களிடம் கொள்முதல் செய்த நிலையில் கொள்முதல் விலை குறைப்பின் பலனை பொதுமக்களுக்கு வழங்காத சூழலில் தற்போது பால் கொள்முதல் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு என்கிற பொய்யான காரணத்தை கூறி பால், தயிர் விற்பனை விலையை உயர்த்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏற்கனவே தேனீர் கடைகள், உணவகங்கள், பால் சார்ந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்பவர்கள் என பெரும்பாலானவர்கள் தனியார் பால் நிறுவனங்களையே சார்ந்திருப்பதால் பால் விற்பனை விலை உயர்வு காரணமாக தேனீர், காபி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
பால் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லாத சூழலில் இதனை தமிழக அரசு தடுக்கத் தவறும் பட்சத்தில் வருகின்ற கோடை காலத்தில் பால் உற்பத்தி பாதிக்கப்படும் போது வரலாறு காணாத வகையில் பால் விற்பனை விலையை உயர்த்தும் அபாயம் உள்ளது. எனவே தனியார் பால் நிறுவனங்களின் தன்னிச்சையான பால் விற்பனை விலை உயர்வு விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பால், தயிர் விற்பனை விலை உயர்வை தடுத்து நிறுத்துவதோடு, தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் மற்றும் விற்பனை செய்கின்ற பாலுக்கான விலையை வரன்முறைபடுத்தி, அதனை தமிழக அரசே நிர்ணயம் செய்கின்ற வகையில் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என எங்களது சங்கத்தின் சார்பில் கடந்த கால ஆட்சியாளர்களிடம் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வந்த கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு அதனை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினில் நாளொன்றுக்கு சுமார் 39லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டு அதில் வெறும் 25லட்சம் லிட்டர் மட்டுமே பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது பால் முகவர்களுக்கு பகல் நேரத்தில் விநியோகம் செய்யப்படும் பால் முற்றிலுமாக நிறுத்தப்படுகின்ற சூழலை உருவாக்கி கடந்த வாரம் முதல் ஆவினில் செயற்கையான பால் தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு வருகிறது.
பால் உற்பத்தியும், கொள்முதலும் பாதிப்பு இல்லாத காலத்தில் தனியார் பால் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ஆவின் நிறுவனத்தில் செயற்கையான பால் தட்டுப்பாட்டை ஆவின் அதிகாரிகள் உருவாக்குகிறார்களோ என்கிற பலத்த சந்தேகம் எழுகிறது. எனவே ஆவின் பால் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யவும், செயற்கையான பால் தட்டுப்பாட்டை உருவாக்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியுள்ளார்.