கொரோனோ தடுப்பூசியைக் கட்டாயமாக்க கூடாது: மக்கள் மருத்துவக் கூட்டமைப்பு போராட்டம்
தமிழ்நாடு அரசு கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாக்கித் திணிக்கக் கூடாது, விரும்புவோர்க்கு மட்டும் தடுப்பூசி செலுத்த வேண்டும், தேர்வு அச்சத்தைக் காட்டி குழந்தைகளிடம் ஊசியைக் கட்டாயப்படுத்தக் கூடாது, தடுப்பூசி போட்ட பின்பு உயிரழந்தோர் மற்றும் உடல் நலமிழந்தோர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, நேற்று (23.02.2022) காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் மருத்துவக் கூட்டமைப்பு சார்பில், போராட்டம் நடைபெற்றது.
தடுப்பூசித் திணிப்புக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள “மக்கள் மருத்துவக் கூட்டமைப்பு” சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் அரசின் தடுப்பூசித் திணிப்புக்கெதிராகப் பல்வேறு ஊர்களில் போராட்டங்களை முன்னெடுத்தவர்களும், அக்குபங்சர், சித்த மருத்துவம், ஓமியோபதி போன்ற மாற்று மரபுவழி மருத்துவம் மேற்கொள்ளும் மருத்துவர்கள் மட்டுமின்றி அலோபதி மருத்துவர்களும், மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் என பல தரப்பினரும் தங்கள் குடும்பங்களுடன் போராட்டத்தில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திரண்டிருந்தனர்.
மூத்த ஊடகவியலாளர் திரு. சாவித்திரி கண்ணன், கிராம வாழ்வியல் இயற்கை மருத்துவ சங்கச் செயலாளர் திரு. தங்க சண்முக சுந்தரம், ”மனிதி” செல்வி, சமூகச் செயல்பாட்டாளர் திரு. ரோஸ் உள்ளிட்ட பல்வேறு சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசின் கட்டாயத் தடுப்பூசித் திணிப்பு கைவிடப்படும் வரை போராட்டம் ஓயாது என்ற முழக்கத்தோடு ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது!