நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மிக மோசமான தோல்வியைத் தழுவி இருக்கிறது மக்கள் நீதி மய்யம். இந்த் தேர்தல் தோல்வி தொடர்பாக கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகார பலம், பண பலம், கூட்டணி பலம், ஊடக பலம் கொண்டவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட துணிந்த ம.நீ.ம வேட்பாளர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான். நீங்கள் போட்டியிட்ட வார்டுகளில் நீங்கள் வென்றதாகவே நினைத்து மக்கள் பணியை தொடருங்கள். உங்களை வெற்றி பெற செய்யாததை நினைத்து வருந்தும் அளவிற்கு சேவையாற்றுங்கள்.
பல இடங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான வாக்காளர்களே தங்களது ஓட்டுகளை செலுத்தி இருக்கிறார்கள். கழகங்கள் போட்ட கள்ள ஓட்டுகளை கழித்தால், இன்னமும் கூட குறைவான சதவீத மக்களே இந்த தேர்தலில் பங்கேற்றிருப்பார்கள். தமிழகத்தில் நிகழும் ஆபாச அரசியலை பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. நாம் பேச வேண்டியது அவர்களிடம்தான்.
மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்’ என்பது ஒரு சம்பிரதாயமான வார்த்தை. அதை நான் சொல்ல விரும்பவில்லை. மக்களும் பல சமயங்களில் கூட்டாக சேர்ந்து தவறான முடிவுகளை எடுப்பார்கள். வரலாறு நெடுக அதற்கு உதாரணங்கள் உண்டு. எங்களைப் போன்ற நேர்மையாளர்களை, அரசியலை பணம் குவிக்கும் தொழில்வாய்ப்பாக கருதாதவர்களை, வாக்குறுதி தந்துவிட்டு ஏமாற்றாதவர்களை, ஊழலற்ற வெளிப்படையான திறமையான நிர்வாகத்தின் மூலம் தமிழகத்தை சீரமைக்க நினைப்பவர்களை தோற்கடிப்பதில் உங்களுக்கு ஒரு பெருமையும் இல்லை.
என் எஞ்சிய வாழ்க்கை தமிழக மக்களுக்குத்தான் என 4 ஆண்டுகளுக்கு முன் நான் அறிவித்தது வெறும் வாய்ஜாலம் இல்லை. இடைக்கால வெற்றி தோல்விகள் எங்களின் மக்கள் பணியை என்றுமே பாதித்ததில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் அதற்கு விதிவிலக்கல்ல. என கமல் தெரிவித்துள்ளார்.
உயிரே உறவே தமிழே… pic.twitter.com/XbtweyfePW
— Kamal Haasan (@ikamalhaasan) February 23, 2022