செய்திகள்தமிழ்நாடு

மாநிலக் கல்விக் கொள்கையை வகுப்பதில் தாமதம் கூடாது: அன்புமணி ராமதாஸ்

பா.ம.க.இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தேசிய உயர்கல்வித் தகுதிகள் கட்டமைப்புக்கான வரைவு ஆவணத்தில் இடம் பெற்றுள்ள சமூகநீதிக்கு எதிரான எந்த அம்சத்தையும் ஏற்க இயலாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த நிலைப்பாடு மிகவும் சரியானது என்ற போதிலும், மத்திய அரசின் நிலைக்கு மாற்றாக தமிழகத்தில் எத்தகைய கல்விக் கொள்கை செயல்படுத்தப்படவுள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் செய்யப்படும் காலதாமதம் தேவையற்ற குழப்பங்களையும், ஐயங்களையும் ஏற்படுத்தியுள்ளது. புதிய தேசியக் கல்விக் கொள்கையை கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்ட மத்திய அரசு, அதனடிப்படையில் தேசிய உயர்கல்வித் தகுதிகள் கட்டமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதற்கான வரைவு ஆவணத்தை கடந்த ஒன்றாம் தேதி வெளியிட்ட பல்கலைக்கழக மானியக்குழு, அதுகுறித்த கருத்துகளை பிப்ரவரி 13-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.

பின்னர் அதற்கான காலக்கெடு பிப்ரவரி 22-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசின் சார்பில், அதன் நிலைப்பாடு குறித்து எந்த அறிக்கையும் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் தாக்கல் செய்யப்படவில்லை என்று தி இந்து ஆங்கில நாளிதழில் செய்திக் கட்டுரை வெளியாகியிருந்த நிலையில், அதுகுறித்து விளக்கமளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வரைவு ஆவணத்தில் உள்ள அம்சங்கள் ஏற்கத்தக்கதல்ல என்று குறிப்பிட்டிருக்கிறார். தமிழகத்தில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழிகாட்டுவதற்காக மாநில கல்விக் கொள்கை வகுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

தேசிய உயர்கல்வித் தகுதிகள் கட்டமைப்புக்கான வரைவு ஆவணத்தில் இடம் பெற்றுள்ள உயர்கல்வி கற்பதற்காக கட்டுப்பாடுகளை சமூகநீதியில் அக்கறை கொண்ட எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு, 3 ஆண்டு பட்டப்படிப்பை நான்காண்டுகளாக நீட்டித்தல், பட்டப்படிப்பில் ஒவ்வொரு ஆண்டும் பருவத் தேர்வுகளில் வெற்றி பெறாத மாணவர்களை, பட்டப்படிப்பை தொடர்ந்து படிக்க அனுமதிக்காமல், அவரவர் நிறைவு செய்த ஆண்டுகளின் அடிப்படையில், சான்றிதழ், பட்டயம் கொடுத்து வெளியேற்றுதல் போன்றவை சமூக நீதிக்கு எதிரானவை. ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் பட்டப்படிப்பைக் கூட படித்து விடக் கூடாது என்பது தான் தேசிய உயர்கல்வித் தகுதிகள் கட்டமைப்பு உருவாக்கப்படுவதன் நோக்கமாக இருக்கக்கூடும். இதை ஒருபோதும் தமிழ்நாடு அனுமதிக்கக்கூடாது.

50 விழுக்காட்டுக்கும் கூடுதலான மாணவர் சேர்க்கையுடன் உயர்கல்வி வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இதை அடுத்தடுத்த நிலைகளுக்கு கொண்டு செல்வது தான் தமிழக அரசின் இலக்காக இருக்க வேண்டும். அதற்கு தேசிய உயர்கல்வித் தகுதிகள் கட்டமைப்பு முட்டுக்கட்டையாக இருக்கும். புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டியது எவ்வாறு கட்டாயம் இல்லையோ…. அதேபோல், தேசிய உயர்கல்வித் தகுதிகள் கட்டமைப்பை கடைபிடிக்க வேண்டியதும் கட்டாயம் இல்லை. அதேநேரத்தில் தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்து, செயல்படுத்துவது தான் மாணவர்கள் மத்தியில் நிலவும் ஐயங்களையும், குழப்பங்களையும் போக்கும்.

உயர்மட்டக்குழு அமைப்பது எப்போது?

தமிழ்நாடு அரசு அதன் கல்விக் கொள்கையை வெளியிடுவதன் மூலமாக மட்டுமே இது சாத்தியமாகும். தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், ”தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கு எனத் தனித்துவமான மாநிலக் கல்வி கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்டஉயர் மட்டக் குழு  ஒன்றை இந்த அரசு நியமிக்கும்” என அறிவிக்கப்பட்டது.

ஆனால், அதன்பின் 7 மாதங்கள் ஆகி விட்டது மட்டுமின்றி, அடுத்த நிதிநிலை அறிக்கையும் இன்னும் சில வாரங்களில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மாநிலக் கல்விக் கொள்கையை வகுப்பதற்கு இதுவரை எந்தவிதமான பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல திட்டங்கள் தமிழக பல்கலைக்கழகங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனத்தைக் கொண்டுபுதிய கல்விக் கொள்கை  அடிப்படையிலான கலை மற்றும் கலாச்சாரம் குறித்த பயிற்சி வழங்குவதற்கான முயற்சிகளும் நடந்தன. பாமகவின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, கடைசி நிமிடத்தில் கலை, கலாச்சாரம் குறித்த பயிற்சி ரத்து ஆனது. இத்தகைய மாறுபட்ட நிலைப்பாடுகளால் புதிய கல்விக் கொள்கைகுறித்த ஐயம் முழுமையாக விலகவில்லை.

இந்த நிலையை மாற்ற தமிழக அரசு அறிவித்த மாநிலக் கல்விக் கொள்கை  குறிப்பிட்ட காலவரைக்குள் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கும் குழுவை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அதில் சமூகநீதியில் அக்கறை கொண்ட கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களுக்கு இடமளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button