“சிதம்பரம் நடராஜர் கோயிலைத் தனிச்சட்டம் இயற்றி அரசு கட்டுபாட்டில் கொண்டுவர வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இக்கோயிலுக்கு வழிபட வரும் பக்தர்களுக்குக் கொலை மிரட்டல், பெண் பக்தர்கள் மீது தாக்குதல், சாதிய தீண்டாமை உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் தீட்சிதர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
வழக்குப் பதிவு செய்தாலும் அவர்களைக் கைது செய்வதில்லை. எனவே, சம்பந்தபட்ட தீட்சிதர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.
நடராஜர் கோயில் சமூக விரோதிகள் மற்றும் சட்ட விரோதிகளின் புகலிடமாக மாறாமல் தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்றி அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். மேலும் சிற்றம்பல மேடையில் அனைத்து பக்தர்களும் இலவசமாகத் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடி வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயிலில் இவர்கள் காசுக்காகத்தான் சேவை செய்கிறார்கள். யாராவது ரூ.1 கோடி கொடுத்தால் நடராஜர் சிலையைத் தூக்கி கொடுத்து விடுவார்கள். இதுகுறித்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தபடும், சட்டமன்றத்திலும் பேசப்படும். வழக்குப்பதிவு செய்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் தீட்சிதர்களைக் கைது செய்யாததை கண்டித்து வரும் 26-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் சிதம்பரம் கோயில் முற்றுகை போராட்டம் நடைபெறும்” என்றார்.