தமிழ்நாட்டில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.
12,500க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு, 57,600க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்தது. இந்நிலையில், 6 மணிக்கு பிறகு, தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர் அல்லாத, வெளியாட்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் அனைவரும் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையல், சென்னையில் 45 பறக்கும் படை குழுக்கள் கண்காணித்து வந்த நிலையில், கூடுதலாக 45 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக, தமிழகம் முழுவதும் சுமார் 80 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.