பஜாஜ் குழுமங்களின் முன்னாள் தலைவரான ராகுல் பஜாஜ் இன்று புனேயில் காலமானார். அவருக்கு வயது 83.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்த ராகுல் பஜாஜ், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக பஜாஜ் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த ராகுல் பஜாஜ், இன்று பிற்பகல் 2.30 மணியளவில் குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையில் உயிரிழந்துள்ளார். அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ் அவர்களின் மறைவை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.