தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்க ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்த நிலையில், இக்கூட்டத்தில் அதிமுக மற்றும் பாஜக பங்கேற்காததற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்லி பொதுமக்களை ஏமாற்றத்துடிக்கும் ஓ.பன்னீர் செல்வத்தின் செயல் கண்டனத்திற்குரியது. அதிமுகவும் பாஜகவும் கூச்சமின்றி நாடகத்தைத் தொடர்கின்றன” என்றார். மேலும், திமுக ஆட்சி இருந்தவரை நீட் தமிழகத்திற்குள் நுழையவில்லை என தெரிவித்த துரைமுருகன், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, பாஜக நாடகத்திற்கு தமிழக மக்களும் மாணவ சமுதாயமும் இணைந்து பதிலடி கொடுக்கும்” என்றார்.