திமுகவில் கடந்த 2017-ல் தகவல் தொழில்நுட்ப அணி உருவாக்கப்பட்டது. அணியின் செயலாளராக நியமிக்கப்பட்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், சமூக வலைதளங்கள் மட்டுமல்லாமல், தகவல் தொழில்நுட்பங்கள் மூலம் திமுகவின் வெற்றிக்கு பங்காற்றினார்.
தற்போது பழனிவேல் தியாகராஜனுக்கு நிதிஅமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டதால், கட்சிப் பணியில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறப்பட்ட நிலையில் அந்த பொறுப்பை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில மாதங்களாக சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் ஆற்ற வேண்டிய கடமைகளுடன், தகவல் தொழில் நுட்ப அணியின் பணிகளையும் ஒருசேர கவனிப்பது கடினமாக இருந்தததாக குறிப்பிட்டுள்ளார்.
2014-ம் ஆண்டுக்கு பின் தமிழ்நாட்டின் நிதிநிலைமை வெகுவேகமாக சீரழிந்தது என்றும், பொதுநிர்வாகமும் பெரும் சீர்கேடுகளை சந்தித்தது என்றும் குறிப்பிட்டுள்ள பழனிவேல் தியாகராஜன், முதல்வரின் வழிகாட்டுதல்படி தங்களின் முழு கவனம் மற்றும் திறன்களை பயன்படுத்தி அவற்றை சரிசெய்ய முடியுமென நம்புவதாக கூறியுள்ளார்.
இதுபோன்ற சூழலில் தகவ்ல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக பணியாற்றுவது கடினமாக இருந்தது என்றும், முழு அர்ப்பணிப்புடன் பணிகளை மேற்கொள்ள முடியாத சூழலில் பெருமைக்காக பதவிகளில் ஒட்டிக்கொண்டிருப்பது தனது இயல்பு அல்ல என்றும் அறிக்கையில் பழனிவேல் தியாகராஜன் குறிப்பட்டுள்ளார்.