உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, இந்த ஆண்டு கொரோனா கட்டுபாடுகளுடன் நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டிகள் மாலை 4 மணியுடன் நிறைவு பெறுகிறது.
150 பார்வையாளர்கள் மட்டுமே போட்டியை காண அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் நாட்டு மாடுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. சுமார் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் போட்டி நடைபெறும்போது 75 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் 26 பேரும், மாட்டின் உரிமையாளர்கள் 22 பேரும், பார்வையாளர்கள் 11 பேரும் பாதிக்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக 17 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பார்வையாளராக வந்த அவனியாபுரம் கணக்குப்பிள்ளை தெருவை சேர்ந்த குட்டீஸ் என்பவரது மகன் 18 வயது பாலமுருகன் மீது காளை மாடு இடது பக்க மார்பில் குத்தியதில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்சு மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.