தஞ்சாவூரில் கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த புரட்சித் தலைவி அம்மா கோவில் என்ற ஜெயலலிதா கோவில் இடிக்கப்பட்டது.
தஞ்சாவூர் நகரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தஞ்சாவூரின் பிரதான வீதிகளில் சாலைகளை அகலப்படுத்தியும் மழை காலங்களில் வெள்ள நீர் தேங்காமல் கால்வாய்களில் செல்லவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா மறைந்த 2 வாரங்களிலேயே தஞ்சாவூரில் அவரது பெயரில் ஒரு சிறு கோவில் கட்டப்பட்டது. தஞ்சாவூர் மேலரத வீதியைச் சேர்ந்த அதிமுக தொண்டர் சுவாமிநாதன் இந்த கோவிலை கட்டினார்.
132 சதுர அடியில் கட்டப்பட்ட இந்த கோவிலில் ஜெயலலிதாவின் மிகப் பெரிய உருவப்படத்தை வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. கோவிலுக்கு வெளியே ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் உருவ சிலைகளும் வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் ரூ2 லட்சம் செலவில் ஜெயலலிதா கோவில் கட்டப்பட்டது.
இந்த நிலையில் கழிவு நீர் கால்வாயை ஆக்கிரமித்து சுவாமிநாதன் கட்டியிருந்த ஜெயலலிதா கோவில் இடிக்கப்பட்டது. பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு இந்த கோவில் அகற்றப்பட்டது.